Corona virus: “சீனா டூ ஆப்ரிக்கா” கண்டங்கள் தாண்டிய பேராபத்து - எதிர்கொள்ள தயாரா

கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவுடன் நெருங்கிய உறவை கொண்டுள்ள ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எகிப்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.







சீனாவை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தை வளர்ச்சியில் பின்தங்கிய ஏழை நாடுகளால் எதிர்கொள்ள முடியாது என்ற அச்சத்தின் காரணமாகவே, இதை உலக சுகாதார அவசர நிலையாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்தது.


"இந்த பிரகடனத்துக்கு சீனாவை விட மற்ற நாடுகளில் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கமே முக்கிய காரணம். வலுவற்ற சுகாதார அமைப்பை கொண்டுள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் என்னவாகும் என்பதே எங்களது அச்சத்துக்கு முக்கிய காரணம்" என்று கூறுகிறார் எத்தியோப்பியாவை சேர்ந்தவரும், உலக சுகாதார அமைப்பின் தலைவருமான டெட்ரோஸ் அடனோம்.


ஏற்கனவே இருக்கும் சுகாதார பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கே திணறி வரும் ஆப்பிரிக்க நாடுகளால், போன்ற அதிவேகமாக பரவி உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய கொரோனா வைரஸ் அளிக்கும் சவாலை சமாளிக்க முடியுமா


கொரோனா வைரஸின் தொடக்க நிலையை எதிர்கொள்வதற்கு தேவையான வசதிகளை சில ஆப்பிரிக்க நாடுகள் கொண்டிருப்பதாக கூறுகிறார் ஆப்பிரிக்காவுக்கான உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரியான மைக்கேல் யாவ்.


"ஆப்பிரிக்க கண்டத்தில் சுகாதார வசதிகள் எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். ஏற்கனவே பலவிதமான நோய்களை சமாளிக்க முடியாமல் ஆப்பிரிக்க நாடுகள் தத்தளித்து வருகின்றன. எனவே, எங்களைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பை தொடக்க நிலையிலேயே கண்டறிவது மிகவும் முக்கியமானது. இதன் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும்."



சென்ற வாரம் வரை, ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டத்திலேயே, கொரோனா வைரஸின் தாக்கத்தை கண்டறிய கூடிய வசதிகளை வெறும் இரண்டு பரிசோதனை மையங்களே பெற்றிருந்தன.


நீண்டகாலமாக ஆப்பிரிக்காவில் ஏற்படும் மோசமான நோய்த்தாக்குதல்கள் குறித்து பரிசோதனை மற்றும் ஆய்வு செய்யும் இந்த மையங்கள் செனகல் மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருக்கின்றன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னதாக, கானா, மடகாஸ்கர், நைஜீரியா, சியாரா லியோன் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.


மேலும், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள 29 பரிசோதனை மையங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை உலக சுகாதார அமைப்பு அனுப்பி வருகிறது.