டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமா என்பது தொடர்பான வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் இந்தியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம்.
அரசு அமைப்புகள், சில தனியார் அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை குறித்த கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பதில் அளிக்கப்படும்.
ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள், பிரச்சனையை உருவாக்கும் கேள்விகள், ராணுவம் தொடர்பான கேள்விகளை இதன் மூலம் கேட்க முடியாது. இந்த சட்டத்தின் மூலம் நிறைய முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் இந்த சட்டத்திற்கு வலு இல்லாமல் போக செய்யவும் முயற்சிகள் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமா என்று கேள்வி எழுந்தது.
அகர்வால் உச்ச நீதிமன்றம் தொடர்பான கேள்வி ஒன்றை ஆர்டிஐ மூலம் கேட்டு இருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்துக்கள் குறித்த விவரம் வேண்டும் என்று அவர் தகவல் ஆணையத்திடம் கேட்டு இருந்தார். இதற்கு உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து சுபாஷ் மத்திய தகவல் ஆணையத்தை அணுகினார். இதற்கு தகவல் ஆணையம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வருகிறது. அதனால் சுபாஷுக்கு தேவையான தகவலை அளியுங்கள் என்று கூறியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தது.
இதை ஒரு நீதிபதி அமர்வு டெல்லி ஹைகோர்ட்டில் விசாரணை செய்தது. அப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அலுவலகமும் வரும், அதனால் சுபாஷ் கேட்கும் தகவலை கொடுக்கலாம் என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது.